பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் இன்று (செப்.07) மனு அளித்தார். அதில், "விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் தகுதியற்ற நபர்கள் பயன் பெறுகின்றனர். அதனை தடுத்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசுகையில், "இந்தி திணிப்பை மத்திய அரசு செய்யவில்லை. திணிப்பு தவறு என்பதை ஒப்புக்கொள்கிறது. மும்மொழிக் கொள்கை என்பது ஏதேனும் ஒரு மொழியை கற்பதற்கான வாய்ப்பு. அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் இரண்டு மொழியைக் கற்கிறார்கள்.
ஏழைகளும் மூன்றாம் மொழியை கற்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மொழி அரசியலில், பதவி சுகத்தை அனுபவித்து அதிகாரத்தை ருசித்த திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டீ ஷர்ட் மூலம் இந்தி படிக்க மாட்டோம் என பரப்புகின்றனர். நீங்கள் வேறு மொழியைக் கூட படியுங்கள் அந்த மொழியை கற்பதற்கு தடை செய்யக்கூடாது.
உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் படிக்க வேண்டாம். திமுக குடும்பம் குழந்தைகள் எத்தனை பேர் இந்தி மொழியை படிக்காமல் இருக்கிறார்கள். திமுகவினர் நடத்தும் எந்தெந்த பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்பிக்கப்படுகிறது என எங்களுக்குத் தெரியும். எதற்காக இந்த இரட்டை வேடம். மொழி அரசியல் சுகம் கண்ட நீங்கள் மீண்டும் 2021 அதே மொழி அரசியலை தூண்டிவிட நினைக்கிறீர்களா, இன்றைய இளைய சமுதாயம் விழித்துக்கொண்டுள்ளது.
டீ ஷர்ட்டில் மட்டும் தமிழில் எழுதினால் தமிழ் வளராது. பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அதை நாங்கள் வரவேற்கிறோம். டீ ஷர்ட்டில் தமிழ் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனால் தமிழுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினை நிரூபிக்க சொன்ன வானதி சீனிவாசன்!