திருப்பூர்: இடுவாய் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா மாணவ-மாணவிகளை சாதி பெயரை குறிப்பிட்டு திட்டி வருவதாக கூறப்படுகிறது.
பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேரடியாக பள்ளிக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்த தலைமை ஆசிரியர், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்