திருப்பூர்: கோவை செழியனின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொது மருத்துவ முகாம், குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கிவைப்பதற்காக வருகைதந்த அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, " வேளாளர் சமூகத்தின் பெயரை வேறு பிரிவினருக்கு வழங்குவது குறித்து முதலமைச்சர் அவசரகதியில் முடிவெடுத்துள்ளார். இது தமிழ்நாட்டில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில் மக்களைச் சந்திக்க முடியாதவாறு எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலை அதிமுக அரசு செய்துவருகிறது. அதனை அதிமுக கைவிட வேண்டும். தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் திட்டத்தை அதிமுக அரசு அறிவித்து இருந்தாலும், அது அதிமுகவுக்கு கைகொடுக்காது.
முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவித்து அவர்களை ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி என அறிவித்துள்ளது. இதை பாஜக ஏற்றுக்கொள்ளாத சூழலில், பாஜக கூட்டணியில் இல்லை என்பதை அதிமுகவால் அறிவிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் விடுதலை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதே எதார்த்தமான உண்மை" என்றார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு குருதிக்கொடை அளித்தனர்.
இதையும் படிங்க: கொங்கு ஈஸ்வரனை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார்'- ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு