திருப்பூர் பல்லடம் அருகே பொங்கலூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் நில வருவாய் ஆய்வாளராகக் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு பொங்கலூர் அடுத்த அழகுமலை பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெயரில் டிப்பர் லாரிகளை வைத்து உள்ள முருகேஷ் என்பவரிடம் பொங்கலூர் வழியாக லாரிகள் செல்ல வேண்டுமென்றால் மாதாம் மாதம் லஞ்சம் தர வேண்டும் என நில வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேஷ் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நில வருவாய் ஆய்வாளரைப் பிடிக்கத் திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் பொங்கலூரிலுள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு லாரி உரிமையாளர் முருகேசனுடன் சென்றனர்.
அங்கு ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணத்தை முருகேஷ் அலுவலகத்திலிருந்த செந்தில்குமாரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக செந்தில்குமாரை பிடித்தனர். மேலும், லஞ்சப் பணமாக அவர் பெற்றுக்கொண்ட ரூ.25 ஆயிரம் மற்றும் கணக்கில் வராத 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து அவருடைய வரவு, செலவு கணக்கு விபரங்கள் குறித்தும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டில் பிரசவம், குழந்தை உயிரிழப்பு : தாய் மீது வழக்குப்பதிவு