திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நிலம் எடுக்கும் முடிவை கைவிட வேண்டுமென முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் மாணவர் சங்க துணைத்தலைவர் லோகு கூறுகையில், 'சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். கல்லூரி வளாகத்தில் உள் விளையாட்டு அரங்கு கட்டியபின் 31 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது.
மொத்தம் 15 ஏக்கரில் கட்டடங்கள் உள்ளன. 5 ஏக்கரில் மரம் வளர்க்கிறோம். கல்லூரி ஆட்சி மன்றக் குழுவில் நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாதபடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நூலகம் ஆய்வகம் உள்ளிட்ட வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
கூடுதலாக 20 வகுப்பறை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி தேவைக்கு இடம் குறைவாக இருக்கும்போது விளையாட்டு துறைக்கு 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
கல்லூரி இடம் கல்லூரி கல்விப் பணிக்கு பற்றாக்குறையாக இருக்கும் போது விளையாட்டுத்துறை இடத்தை அபகரிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.
கல்லூரியில் சுற்றுச்சூழலை காக்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது வளர்ந்து வருகிறது. விளையாட்டுத்துறை இடத்தை எடுக்கும்; ஆனால், அந்த ஆயிரம் மரங்களை அழித்து விட்டு தான் அங்கு மைதானம் அமைக்க முடியும். அதனால் நாங்கள் இருக்கும் வரை அது நடக்காது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரியலூரில் மருத்துவக்கல்லூரி கட்டப்படும் இடத்தை தாமரை ராஜேந்திரன் ஆய்வு