நடிகர் ரஜினிகாந்த் பலமுறை அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்தாலும்கூட தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கட்சி தொடங்க உள்ளதாக அவர் அறிவித்தார். விரைவில் கட்சியின் பெயர் சின்னங்கள் வெளியிடப்படும் என அவர் அறிவித்தையொட்டி, அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம்
இதனிடையே அவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின்னர் ரஜினி உடல்நலம் தேறினார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இனி வரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று (டிச.29) அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். தான் கட்சி தொடங்கவில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஏமாற்றத்தில் ரஜினி ரசிகர்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள், ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்பட அனைவரையும் அவரது (ரஜினி) அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
திருப்பூர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, இந்த அறிவிப்பு என்பது ஏமாற்றமாக இருந்தாலும் ரஜினிகாந்தின் உடல்நிலைதான் தங்களுக்கு முக்கியம், அவரது சொல்படி நடப்போம் என தெரிவித்தனர்.
ரஜினி இழந்த வாக்குகள்
திருப்பூர் ரஜினி மன்ற நிர்வாகிகளின் கணக்கெடுப்புப்படி 30 விழுக்காடு வாக்குகள் ரஜினிக்கு வரும் வாய்ப்பு இருந்தது. தற்போது ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தவிர்த்துள்ளதால், அடுத்தக்கட்டமாக மேலிடம் என்ன முடிவு சொல்கிறதோ அதன்படி நடப்போம் என ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு