திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றாவது வார்டு இறைச்சி மஸ்தான் நகர்பகுதி முழுவதிலும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தாராபுரம் நகராட்சியால் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அதே பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நகராட்சியின் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், தங்கள் தெருக்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நடந்து செல்வதற்கு கூட வசதியில்லாத நிலையில் குடியிருப்புவாசிகள் பலரும் தங்களது வீடுகளின் முன் பந்தல் போட்டும், மரங்களை நட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
நகராட்சி நடைபாதையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அலுவலர்கள் எடுத்த பின்னரே சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். இதற்கிடையில் அப்பகுதியில் சாலை அமைக்க அனுமதிக்க முடியும் எனக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அலுவலர்களின் வாகனத்தை வழிமறித்து, அதன் முன் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். பெண்களின் திடீர் போராட்டத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலர்கள் சாலை அமைக்கும் தெருக்களை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தப் பிறகு பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.