திருப்பூர்: ஊத்துக்குளி ஒன்றியம், காவுத்தம்பாளையம் கிராமத்தில் உயர்மின் கோபுரம் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அரசு நிலங்களை கையகப்படுத்திப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இதற்காகப் பல நபர்களிடம் இருந்து 68 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் விலைக்கு பெறப்பட்டு உள்ளது. மேலும் சில நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இப்பணிக்கு எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அப்பகுதி பொதுமக்களும் தொடர்ச்சியாக 47ஆவது நாளாக சம்பவ இடத்தில் ஷெட் அமைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் கூறுகையில், விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரை அமைக்கப்பட உள்ள உயர்மின் கோபுர துணை மின் நிலையத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, 47ஆவது நாளாக 16-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வதாக தெரிவித்தும் இதுவரை இந்தப் பகுதிக்கு வராததால், குமரிக்கல்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய உலகின் உயரமான நடுகல் பாதிக்கப்படும் என்றனர்.
மேலும் இங்கு கல் திட்டைகள், 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, ஓடுகள் உள்ளிட்ட சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன எனவும்; அரசு கொண்டு வரும் 746/400 மெகா வாட் துணை மின் நிலைய திட்டமானது இந்த தொல்லியல் எச்சங்களை அழித்து விடும் என்றும்;
ஒரு வார காலத்திற்குள் இந்தப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை எனில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பவித்ரா கூறுகையில், 'ஊராட்சி நிர்வாகம், மக்கள் விருப்பம் இல்லாத நிலையிலும் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்பவர்கள். விவசாய பூமியை நாங்கள் கொடுப்பதாக இல்லை. அருகிலேயே அவிநாசி, அத்திக்கடவுத் திட்டம் இருக்கிறது.
ஆனாலும் விவசாயத்தை அழிக்கும் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வரக்கூடாது. இதை எதிர்த்து 47ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் போடப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டினால் ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டுப் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
இதுகுறித்து ரம்யா கூறுகையில், ''காவுத்தம்பாளையம் ஊராட்சியில் உலகத்திலேயே உயரமான நடுகல் இருக்கிறது. இதை தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் துணை மின் நிலையம் வந்தால் நடுகல் உள்ளிட்ட தொல்லியல் எச்சங்கள் பாதிக்கப்படும். தொல்லியல் துறை வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இதுகுறித்து மூர்த்தி என்பவர் கூறுகையில், “காவுத்தம்பாளையம், குமரிக்கல்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் கொண்டு வரக்கூடாது. இங்குள்ளவர்களிடம் சோலார் அமைப்பதாகக் கூறி 68 ஏக்கர் வாங்கி விட்டார்கள். இன்னும் 40 ஏக்கர் நிலத்தை ஜீரோ வேல்யூவேசன் செய்து யாரும் விற்கவோ வாங்கவோ முடியாமல் செய்து விட்டார்கள். இதனால் நிலமிருந்தும் எந்த ஒரு அவசர செலவையும் மேற்கொள்ள முடியாமல் அகதிகள் போல இருக்கிறோம்” எனக் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து முருகசாமி என்பவர் கூறுகையில், “இந்த திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். இல்லாமல் தன்னிச்சையாக நடத்தினால் போராட்டம் நடத்த வேண்டி வரும். முன்னோர்கள் வாழ்ந்த இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து பழங்கால நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து கமலாத்தாள் என்பவர் கூறுகையில், “குமரிக்கல்பாளையத்தில் விவசாயம் தான் எங்களுக்குத் தொழில். எங்களுக்கு இந்த விவசாய நிலம் தான் வாழ்வாதாரம். குமரிக்கல் நடுகல்லை தெய்வமாக வழிபடுகிறோம். எனவே, அதை அழிக்கக் கூடிய துணை மின் நிலையத்தை அமைக்கக்கூடாது’’ என்றார்.
இதுகுறித்து கண்ணம்மாள் என்பவர் கூறுகையில், “குமரிக்கல்பாளையத்தில் மின் கோபுரம் அமைக்கக் கூடாது. இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைத்து விட்டு தீக்குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். மேலும், ஊராட்சி பொதுமக்களின் விவசாய நிலங்களையும், தொல்லியல் எச்சங்களையும் அழிக்கக்கூடியதாக இருக்கும் இந்த திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: TNJFU: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் முறைகேடு? அடுத்தடுத்து சஸ்பெண்ட்.. நடப்பது என்ன?