கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழ்நாடு அரசின் ஊரடங்கு தளர்வுகளையடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும், கரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாவதால், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியம் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் ப்ரைவசி திரையரங்குகளைக் கொண்டுவந்துள்ளார். இது மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பதால் இங்கு இருக்கக்கூடிய எட்டு ஸ்கிரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த பிரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சுப்பிரமணியம், "3 ஆயிரத்து 999 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இந்த தியேட்டர் கொடுக்கப்படும். அவர்கள் விரும்பும் திரைப்படம் திரையிடப்படும். கரோனா அச்சம் இன்னும் முழுமையாக மக்கள் மத்தியிலிருந்து விலகாத இந்த காலகட்டத்தில், அச்சமில்லாமல் தனியாகவும், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்கக்கூடிய இந்த பிரைவசி தியேட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.
தற்பொழுது அமேசான் நிறுவனம் தனி திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து வருகிறது. அவர்களின் பொருட்களை வைப்பதற்கு இடவசதி தேவை என்பதால் இந்த தனி திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். ஐதராபாத்தில் திரையரங்குகளை வாடகைக்கு எடுக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனம் தனி திரையரங்குகளை வாடகைக்கு எடுக்க முனைப்பு காட்டுவார்கள் என்றார்.
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா காலம் என்பதால் தற்காலிகமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட திரையங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. இருப்பினும் திரையரங்கிற்கு உள்ள மகத்துவம் என்றும் குறையாது. வரும் காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்படும் போது திரையரங்குகள் மீண்டும் உயிர்த்தெழும். அதேபோல் திரையரங்குகளை காப்பாற்ற நடிகர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். குறிப்பாக முன்னணி நடிகர்கள், தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காலத்தை வென்ற கணிதமேதை ராமானுஜன்!