திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா நகர் அருகே கரோனா பாதுகாப்பு கவச உடைகள் சாலையோரமாக வீசி செல்லப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு வழங்கப்படும் இந்த கவச உடைகள் ஏன் சாலையோரமாக வீசி செல்லப்பட்டது என பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.
அதே சமயம், மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ ஊழியர்கள், இதனை வீசி சென்றிருந்தால் இப்பகுதியில் கரோனா பரவும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.