திருப்பத்தூர்: சமீபத்தில் அடுத்தடுத்து காவலர்கள் பணி அழுத்தம் காரணமாகவோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைக்களால், காவல் நிலையங்களிலே தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் காவலர்கள் தங்களின் மனநிலையை உறுதி செய்யும் வகையில், காவலர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் அவ்வப்போது பல்வேறு பயிற்சிகள், மன அழுத்தத்தில் அவதிப்படும் காவலர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரை போன்ற வசதிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவரும் கந்திலி காவல் நிலையத்தில் பணிபுரியும் சோபியா என்பவரும் கடந்த 2021 ஆண்டில் ஒன்றாக காவலர் பயிற்சியின் போது காதலித்து வந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் சோபியாவுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் திடீரென வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், காவலர்கள் பணி நிமித்தமாக இருந்த வேளையில், உதவி ஆய்வாளர் அறைக்கு உள்ளே சென்று தாழிட்டு கொண்டு, அவர் வைத்திருந்த சால்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சோபியா, உதவி ஆய்வாளரின் தற்கொலையை தடுக்க வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் உதவியாளர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி உள்தாழ்பாழிட்டு உள்ளார். அதனை தடுக்குமாறு அங்கிருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் தகவல் அறிந்து விரைந்து செயல்பட்டனர். அறைக்குள் இருந்த உதவி ஆய்வாளரை கூப்பிட்டு உள்ளனர். அவர் அறை தாழிட்டு உள்ளதால் காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அவ்வேளையில், மின்விசிறியில் தற்கொலைக்கு முயற்சித்து, நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை கண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், உதவி ஆய்வாளர் ராஜ்குமாரை மீட்ட சக காவலர்கள் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு உதவி ஆய்வாளரின் தற்கொலை முயற்சி குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி விஜயகுமார், உதவி ஆய்வாளர் ராஜ்குமாரை சமாதானப்படுத்தி ஆலோசனைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனையில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி..! போலீசார் விசாரணை!