திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீட்டில் சேரும் குப்பைகளையும், பொதுவெளியில் உபயோகித்த பொருட்களையும் சாலை ஓரங்களில் பொதுமக்கள் விட்டுச்செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், குப்பைகளிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் சிலருக்கு மூச்சுத்திணறலும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, கடந்த 5ஆம் தேதி சாலையோரங்களில் உள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியதுடன், சாலைகளில் குப்பைகளை கொட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
மேலும், இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் உடுமலைப்பேட்டையில் ஆங்காங்கே வைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் வீசும் குப்பைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என உடுமலைப்பேட்டை நகராட்சி அறிவித்துள்ளது