திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை(கடை எண் 1965) செயல்பட்டு வருகிறது. அப்பகுதி வழியே பள்ளிக்கூடங்கள் கோயிலுக்கு சென்று வரும்போது பெண்களுக்கு மதுபிரியர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து அக்கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி அப்பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை முதல் மழை பெய்து வந்த நிலையிலும் பொதுமக்கள் கடையை அப்புறப்படுத்த வழியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காவல்துறை பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் டாஸ்மாக் நிர்வாகம் கடையை அப்புறப்படுத்த எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.