கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொது மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும், வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர்.
இவர்களின் பணிகளை கெளரவிக்கும்வகையில், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று பொது மக்கள் ஒலி எழுப்பி பாராட்டுத் தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி சார்பில் 150க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள், கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுவரும் இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகருக்கு, தினமும் வசந்தாமணி என்ற துப்புரவுப் பணியாளர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகிறார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண், துப்புரவுப் பணியாளர் வசந்தாமணிக்கு பாதபூஜை செய்து, பண மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவருக்குப் புடவை ஒன்றையும் பரிசாக அளித்து, தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார். புஷ்பாவின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: காரில் சென்றவருக்கு 'ஹெல்மெட்' அணியவில்லை என அபராதம்