திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவின் புதிய அலுவலகம் காங்கேயம் சாலையில் திறக்கப்பட்டன. இதை திறந்து வைக்க உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருகை தந்தார்.
அலுவலகத்தை திறந்து வைத்த பின்பு தொண்டர்களிடம் பேசிய அமைச்சர், "நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக கூறி வருகிறது. அதனை நிறைவேற்ற வேண்டுமெனில் அமெரிக்காவின் கஜானாவே போதாது. 2016-17ஆம் ஆண்டிற்கு பின்னரே, தன் மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் தொடர்ந்து ஊழல் புகாரை கூறி வருகிறார். மூன்றே மாதத்தில் குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைத்த ஸ்டாலினின் கனவை தகர்த்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கும், ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பிற்கும் பக்கபலமாக இருந்ததால் என்னையும், அமைச்சர் தங்கமணியையும் ஸ்டாலின் தொடர்ந்து குறைகூறி வருகிறார்.
ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்த காலங்களில் இதுவரை தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சாதனையையும் செய்யாத நிலையில், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்ததில் இதுவரை மத்திய அரசிடமிருந்து 143 விருதுகளை பெற்றுள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதற்கு, அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். நமக்கு எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.