திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்திற்கு, வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும், அனைத்து வேளை நாட்களிலும் பணி வழங்கி கால முறை ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பகுதி நேர ஆசிரியர்: தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ், 16,549 பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்தது. இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி, இசை, தையல், ஓவியம், தொழிற்கல்வி, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில், மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்திற்கு, வாரம் மூன்று அரை நாட்கள் மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களில் சிலர் ஊதிய குறைவு காரணமாக பணியிலிருந்து விலகி தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசுப் பணி நிரந்தரம் வழங்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்.
திமுக தேர்தல் அறிக்கை: தி.மு.க அரசு தேர்தல் அறிக்கை 181ல் ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்களாக பத்தாண்டுகள் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் வழங்குவோம் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நிரந்தரத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
இதனால், பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள், ஊதிய குறைவின் காரணமாகவும், நிரந்தர வேலையின்மையாலும், பள்ளி வேலை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில், கட்டிட வேலை, பெட்ரோல் பங்க், பனியன் கம்பெனி போன்ற இடங்களில் கூலி வேலைக்குச் செல்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம்: இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தொடர்ந்து 11 நாட்கள், சென்னை டிபிஐ வளாகத்தில், காலவரையற்ற உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைத் தொடர்ந்து அரசு ரூ. 2500 ஊதிய உயர்வும், 10 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஆனால், அரசு அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்தும் ஊதிய உயர்வை வழங்கவில்லை.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பழ.கெளதமன், ஈடிவிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, “அரசு பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகக் கூறினர். ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால், 12 ஆயிரம் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மேலும், ஊதிய உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடும் தருவதாக அறிவித்த நிலையில் அவற்றையும் வழங்கவில்லை.
கடந்த 12 வருடங்களாக, வாரம் மூன்று அரை நாட்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி நிரந்தரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையாகப் போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறினார்.
பின்னர், திருப்பூரைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசை நம்பி, பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறோம். ஆனால், வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணி வழங்குகிறார்கள். இதனால், போதிய வருமானமும் இல்லாததினால், வாரத்தில் மற்ற நாட்களில் ஆசிரியர்கள் கூலி வேலைகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும், அனைத்து வேளை நாட்களிலும் பணி வழங்கி, கால முறை ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தமிழக அரசுப் பணி நிரந்தரம் மற்றும் முழு நேரப் பணி வழங்கும் என 12 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணி புரியும் ஆசிரியர்களின் கண்ணீர் குரல் அரசுக்குக் கேட்க வேண்டும். 12 ஆயிரம் ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு முழு நேரப் பணி கிடைத்தால் அவர்களது குடும்பங்களில் வறுமை தீரும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு; ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!