கோவையிலிருந்து தொடங்கி கரூர் வரை பாயும் நொய்யல் ஆற்றில் சாய சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவு கலப்பதால், பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இருந்து வந்தது.
விவசாயிகள் மற்றும் நொய்யல் கரையோர பொதுமக்களின் தொடர் முயற்சி காரணமாக சாயக் கழிவு நீர் ஆற்றில் கலப்பது தற்போது பெருமளவு குறைக்கப்பட்டு ஆறை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருப்பூர் காசிபாளையம் பகுதியில் நொய்யலாற்றின் கிளை ஆற்றில் நுரையுடன் கூடிய தண்ணீர் பாய்ந்தது. சில இடங்களில் நுரைகள் தேங்கி நிற்கக் கூடிய அவல நிலையும் ஏற்பட்டது. நொய்யல் ஆற்று நீர் மோசமடைந்த நிலையிலும் இப்பகுதி கரையோர மக்களின் கால்நடைகளுக்கு இதுவே முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.
இதனால் நுரை கலந்த நீரை கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கால்நடைகள் பயண்படுத்தப்படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.