மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்துவரும் காரணத்தால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வரக் கூடிய சூழ்நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ராயபுரம் அணை மேடு பகுதியில் உள்ள கரையோரம் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று வெள்ள நீர் புகுந்தது. நேற்று இரவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனவும் நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அதிகளவு இருப்பதால் தண்ணீரில் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இதனால் நோய்த்தொற்று பரவக் கூடும் சூழ்நிலை உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து நீலகிரி, கோவையில் மழை பெய்து வருவதால் இன்னும் நொய்யல் ஆற்றிலிருந்து தண்ணீர் அதிகமாக வரும் வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்!