கரோனா பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதிவரை அமலில் உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (மே 8) திருப்பூர் ரயில் நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சமரசம் ஆகாத வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களை காவல் துறையினர், அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து வருவாய்த் துறையினர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்தை தூண்டியதாக அங்கிருந்த இரண்டு வடமாநில தொழிலாளர்களை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் திருப்பூர் ரயில் நிலையம் அருகே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.