திருப்பூர் மாவட்டம், ஓடக்காடு, பங்களா வீதியைச் சேர்ந்தவர் மயூர் அகர்வால். இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
2019ஆம் ஆண்டு இவருக்கு தொழில் நிமித்தமாக சென்னையைச் சேர்ந்த அரவிந்த் வைஷ்ணவ் (40) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர், மயூர் அகர்வாலிடம் பனியன் துணி ‘ஆர்டர்’ கொடுத்துள்ளார்.
இதனையடுத்து துணிகளை அவரும் விநியோகித்துள்ளார். இதற்கு, ஒரு சிறிய தொகையை மட்டும் அரவிந்த் வைஷ்ணவ் செலுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பிய மயூர் அகர்வால், தொடர்ந்து அவருடன் வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, புதிய ஆர்டர்களுக்கான பனியன் துணிகளை மயூர் அகர்வால் ‘சப்ளை’ செய்துள்ளார்.
ஆனால், புதிய ஆர்டர்களுக்கான பணத்தைக் கொடுக்காமல் அரவிந்த் காலம் கடத்தியுள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மொபைல் போன் ‘சுவிட்ச்’ ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சில ஆர்டர்களுக்கு மட்டும் பாதி தொகையை கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, பின் பணம் கொடுக்காமல் அரவிந்த் வைஷ்ணவ் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
அரவிந்த் வைஷ்ணவ் மொத்தம் 58 லட்சம் ரூபாயும், திருப்பூரில் உள்ள பலரிடம், பல லட்சம் ரூபாய் வரை இதேபோல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரவிந்த் வைஷ்ணவ் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இச்சூழலில், கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த அரவிந்த் வைஷ்ணவ்வை சென்னையில் வைத்து திருப்பூர் காவலர்கள் கைது செய்தனர்.