திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசிகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் புரோட்டீன் அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார்.
அதேபோன்று அவற்றை சேலத்தில் உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் 21 ஆயிரம் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற்று அரசு கேபிளை வழங்கிவருகின்றனர் என்றார். மேலும், ஆறாயிரம் கேபிள் ஆப்பரேட்டர்கள் தனியாக நிறுவனங்களின் சிக்னலை பெற்று தனியார் கேபிள் வழங்கிவருவதாகத் தெரிவித்த அவர், மக்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் கொடுப்பதையே அரசு விரும்புகிறது; இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை எனக் கூறினார்.