கரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் பணிகளைத் தொடங்குவது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் ஏற்றுமதி மற்றும் அனைத்து தொழில் துறை அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், " ஆறாம் தேதி முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்களை தொடங்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தப் பணிகளையும் தொடங்கக்கூடாது. தொழிலாளர்களை நிறுவனங்களே வாகனம் வைத்து அழைத்து வர வேண்டும். தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதோடு அடிக்கடி அவர்களின் உடல் தகுதியை பரிசோதனை செய்ய வேண்டும்.
சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு அரசின் அனுமதியோடு அவர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதனையடுத்து பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், "அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று பணிகளை தொடங்க இருக்கிறோம். இந்த முறை மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தக்கூடிய முழு உடற்கவசம், முகக்கவசம் , கையுறைகள் தயாரிக்கக்கூடிய ஆர்டர்கள் அதிக அளவில் வரக்கூடிய சூழல் இருப்பதால் இந்த தளர்வை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!