திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில், திமுகவின் காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
”கேள்வி கேட்டதால் தூத்துக்குடியில் 13 உயிர்களை சுட்டுக்கொன்ற ஆட்சி இது. தந்தை, மகனை அடித்துக் கொன்றது குறித்து கேள்வி கேட்டால், மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். பொள்ளாச்சி சம்பவத்தில் தற்போதுவரை எத்தனை பெண்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
பெண் ஐ.பி.எஸ் அலுவலர் உயர் அலுவலரால் துன்புறுத்தப்படும்போது, மற்றொரு அலுவலர், குற்றஞ்சாட்டிய பெண் அலுவலரைத் தடுத்து நிறுத்தி மிரட்டுகிறார். அந்தப் பெண் ஐ.பி.எஸ் அலுவலருக்கு திமுக, கூட்டணிக் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் குரல் கொடுத்ததால் அவர் சென்னைக்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல்கூட விடப்படுகிறது.
நீதிமன்றம் கண்டித்த பிறகுதான் தவறாக நடந்த கொண்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். உயர் பதவியில் இருக்கும் பெண் அலுவலருக்கே இந்த நிலைமை என்றால், சாதாராண பெண்கள் இந்த ஆட்சியில் தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். விவசாயக் கடன் ரத்து, இலவச மின்சாரம் கொடுத்தது கருணாநிதி தான். அவர் விவசாயி இல்லை ஆனால் நல்ல மனிதாபிமானம் கொண்டவர் . அது தான் முக்கியம்.

ஸ்டாலினைப் பார்த்து பச்சோந்தியா என முதலமைச்சர் கேட்கிறார், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதரித்து பேசிய சி.ஏ.ஏ சட்டத்தை, இப்போது திரும்பப் பெறுவோம் என முதலமைச்சர் பேசுகிறார். யார் பச்சோந்தி என சிந்தியுங்கள் மக்களே. ஸ்டாலினுக்கு கொள்கை இருக்கிறதா என முதலமைச்சர் கேட்கிறார். யார் காலில் விழுந்தாலும், எதை அடகு வைத்தாலும் பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் கொள்கை” எனப் பேசினார்.
இதையும் படிங்க:’ஸ்டாலின்தான் வராரு... மக்களெல்லாம் உஷாரு’: பாட்டாகவே பாடிய விந்தியா