திருப்பூர்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா (J.P.Nadda), திருப்பூரில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (நவ. 24) திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணிச்செயலாளர் குஷ்பூ, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட 351 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழுக்காக போராடும் கட்சி பாஜக
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் கூறியதாவது, 'பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டது இந்த திருப்பூர் மாவட்டம்.
திருப்பூர் குமரனை நினைவுகூர்கிறோம். சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த வ.உ.சி போன்றோர் வாழ்ந்தது இந்த தமிழ்நாட்டில் தான். சிறந்த கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டில், திருப்பூரில் நடக்கும் செயற்குழுவில் கலந்துகொண்டதில் நான் பெருமையடைகிறேன்.
திமுகவின் குடும்ப அரசியல் பல காலமாக உள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. முன்னேற்றம் மக்கள் நலனுக்கானது பாஜக.
70 ஆண்டுகளாக இருந்த காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளோம். தமிழ்நாடு நலனுக்காக உழைப்பது பாஜக மட்டுமேதான். திமுக தமிழ்நாடு கலாசாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.
கரோனா காலத்தில் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்காமல் செய்த திமுக, பாஜக போராட்டத்திற்கு பின்னே அனுமதித்தது.
வெற்றிவேல் யாத்திரையை தடுக்க பார்த்த தலைவர்களெல்லாம், இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாசாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும். தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.
அன்று கருணாநிதி, இன்று ஸ்டாலின்
கரோனா தொற்று உச்சம் தொட்ட போது ஒன்பது மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் அதனை ஒழித்தவர், மோடி.
தடுப்பூசி மூலம் லட்சக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்தார். எதிர்க்கட்சிகள் அதனை மோடி ஊசி, பாஜக ஊசி என பயமுறுத்தி பரப்புரை செய்தனர். ஆனால், இப்போது அதைத் தான் அவர்கள் போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் 108 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
விவசாய மேலாண்மைக்குப் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5,990 கோடி ரூபாய் பிரதான் கிஷான் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சொன்ன வாக்கை காப்பாற்றாத திமுக
பிரதமர் மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிப்படி குறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
கரோனா தொற்றின்போது உணவு, மருந்து இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என பாஜகவினர் உழைத்தனர். ஆனால், அப்போது திமுகவினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். 50 ஆண்டுகளுக்கு முன் சென்னை வெள்ளத்தின்போது கருணாநிதி வெள்ளத்தில் நின்றார்.
இன்று ஸ்டாலின் நிற்கிறார் ஒன்றும் மாறவில்லை.
பூத் கமிட்டி மூலம் கடுமையாக உழைக்கவேண்டும், மத்திய அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். பாஜகவினர் நீங்களே மாற்றத்திற்கானவர்கள். உங்கள் பகுதியின் தலைவர்கள்; நீங்களெல்லாம் பாஜகவில் இருக்க பெருமையடையவேண்டும்' எனத் தெரிவித்தார்.