பனியன் தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதனால் திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளான அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, பெருமாநல்லூர் சாலை, திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதி, திருப்பூர் புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
திருப்பூரில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். இதனால் அதிகாலை நேரத்தில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு செல்லும் கூட்டம் மட்டும் காணப்பட்டது. ஓரிரு இறைச்சிக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதனால் திருப்பூர் மாநகரம் முழுமையாக வெறிச்சோடியது. நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக திருப்பூர் மாநகரம் முழுமையாக முடக்கம் கண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே திருப்பூர் குமரன் சாலையில் திறக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் கடைக்கு திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.