திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி காவல் ஆய்வாளர் மணிமொழி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் எனது மனைவி, இளைய மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின், எனது மூத்த மகனை பார்த்துக்கொள்ள ஆட்கள் தேவை என்பதால் கணவரை பிரிந்து வாழும் பிரதீமா என்ற பெண்ணை நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சில மாதங்கள் கழித்து இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அதன் பின்னர் சில நாட்களுக்கு முன் எங்களுக்குள் ஏற்பட்ட சில குடும்ப சண்டைகளால் வீட்டைவிட்டு போகும்போது 55 பவுன் தங்க நகைகள் மற்றும் இட ஆவணங்கள், வாகன புத்தங்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார்.

இதையடுத்து எனது மகன் அபிஷேக், வீட்டிலிருந்த நகையை காணவில்லை எனக் கூறி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பிரதீமா கடந்த 8ஆம் தேதி போலீஸ் கமிஷ்னரிடம் என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். அதற்கு விளக்கம் கொடுத்துள்ளேன். போலீஸ் அதிகாரிகள் பிரதீமாவிடம் விசாரணை செய்ததற்கு ஒரு கோடி நஷ்டஈடு கேட்டதாக தெரிகிறது.
பிரதீமா என்னிடமிருந்து பணத்தை பறிக்கவே இது போன்று செய்கிறார். இந்நிலையில் என்னை தென்மண்டலத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும் வருகிற வெள்ளிக்கிழமை பணியில் சேர்ந்தால் தான் எந்த பகுதியில் பணி ஆணை வழங்குகிறார்கள் என தெரியும் என்றார்.