திருப்பூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ஆம் தேதி, திருப்பூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், அங்கேரிபாளையம் சாலையில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தனியார் பின்னலாடை நிறுவனத்தில், விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி புகுந்து நன்கொடை கேட்டு மிரட்டியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட பின்னலாடை நிர்வாகம் நன்கொடை தரமறுத்ததால் கற்களைக் கொண்டும், இரும்புக் கம்பிகளை கொண்டும் தாக்கினர். இதில், பின்னலாடை நிறுவனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் பூந்தொட்டிகள் சேதமடைந்தன. மேலும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களையும் தாக்கினர். இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, பின்னலாடை நிறுவன உரிமையாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், இந்து முன்னணியைச் சேர்ந்த இருபது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதனடிப்படையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் துறையினர் கார்த்திக், ராதாகிருஷ்ணன், உதயகுமார், மதேஸ்வரன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர.
இந்து, முன்னணியினரின் இத்தகைய செயல்பாட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.