திருப்பூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே ஆங்காங்கே மிதமான மழை பெய்துவந்தது. இருந்தபோதிலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. இதனால், வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்துவந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஒருவார காலமாக வெப்பச்சலனம் காரணமாக உடுமலைப்பேட்டை, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்துவந்தது. ஆனால், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கடும் வெப்பமான நிலையே நிலவியது.
நேற்று மாலைமுதல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துவந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திருப்பூர், காங்கேயம், உடுமலை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
அதிகபட்சமாக திருப்பூர் மாநகரப் பகுதியில் 87 மி.மீ. மழையும், காங்கேயத்தில் 67மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதிகாலை 1 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும், கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன? முத்தரசன் கேள்வி