திருப்பூர்: பெருமாநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா இன்று (நவ. 22) நடைபெற்றது. இதில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவக்கூடிய காய்ச்சல் மழைக் காலங்களில் பரவக் கூடிய காய்ச்சல் தான்.
இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. அதிகபட்சமாக 2012ஆம் ஆண்டு இது போன்ற காய்ச்சல் காரணமாக 66 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் அதற்குப்பின் வருடத்திற்கு வருடம் அவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 6 ஆயிரத்டு 500 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் வாரத்திற்கு ஆயிரம் மருத்துவ முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்னும் ஆறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முகாமிலும் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வரை பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் காய்ச்சல் கண்டறியப்படுபவர்கள் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் மருத்துவ வரலாற்றிலேயே வடகிழக்கு பருவமழைக்காக பத்து தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தியது இந்த முறை தான். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் உருவாக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையமானது இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் அமையும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. பாதிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு! விரைந்து மருத்துவ சேவை துவக்க உத்தரவு!