திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல திருப்பூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் அரசுப் பேருந்து பாண்டியன் நகர் வழியே சென்றுகொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் பயணம் செய்த பெண்ணை பேருந்தின் நடத்துனர் தெய்வசிகாமணி தவறான வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் சிலர் பாண்டியன் நகர் அருகே பேருந்தை மறித்து தெய்வசிகாமணியை தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளையும் நிறுத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பேருந்துகளை இயக்கினர்.
அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.