நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியம் இல்லாத 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த 12ஆம் தேதி முதல் ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் 14.2 கிலோ மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் எரிவாயு சிலிண்டர் ரூ. 734-லிருந்து ரூ. 147 உயர்த்தப்பட்டு தற்போதைய விலை ரூ. 881-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். மேலும் சாலையில் விறகு அடுப்பு பற்றவைத்து அதில் அரிசி பொங்கியும், டீ பாய்லர்களை கையில் ஏந்தியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்