திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிய வாரச்சந்தை, புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் புதிய குடிநீர், வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு உதவித் தொகை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இந்தியாவிலேயே 30 லட்சம் செட் டாப் பாக்ஸ் இணைப்புகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. மேலும் 10 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க டெண்டர் விடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் செட் டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு வழங்கும்போது முறையாக சென்றடைவதை மாவட்டத்திற்கு ஒரு தாசில்தார், கேபிள் டிவி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவின் நலத்திட்டங்களை மக்கள் மறக்கவில்லை'- அமைச்சர் காமராஜ் பேட்டி