திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், இன்று (மார்ச்.22) அதிகாலை 3 மணி அளவில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்துள்ளனர். இந்நிலையில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயமடைந்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிழந்த இருவரது உடல்களை உடற்கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அவிநாசி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிழந்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், பூலுவபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (25), செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குட்டி (24), திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (23), செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (26) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, நேற்று (மார்ச்.22) இரவு நான்கு பேரும் சேர்ந்து மது அருந்திவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் சத்தமிட்டவாறே சென்றுள்ளனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து அதிவேகமாக இறங்கியபோது, சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளனர். இதில் நான்கு பேரும் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் தீ பிடித்து எரிந்த ராஜஸ்தான் லாரி!