உலகப் பெருந்தொற்றான கரோனா வேறு யாருக்கும் பரவாத வண்ணம் அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திருப்பூர் அரசுத் தலமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய ’கோவிட் விஸ்க்’ என்னும் பாதுகாப்பு மையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவர்கள் இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புடன் வரும் நோயாளிகளைத் தொடாமல், மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களின் உமிழ்நீரைச் சேகரிக்க முடியும். அதனைப் பரிசோதனைக்காக கோவை அல்லது பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள். இதனால் மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.
திருப்பூரில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் அனைவரின் பரிசோதனை முடிவுகளும் வந்துவிடும்” என்றார்.