திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்துவந்தவர் சகுந்தலா. திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியைப் பூர்விகமாகக் கொண்ட இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேலன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமண விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர திண்டுக்கல்லிலிருந்து தாராபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சகுந்தலா வந்துகொண்டிருந்தபோது, ரெட்டியார்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது.
இதில், சகுந்தலா, அவரது கணவர் கதிர்வேலன் இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட, பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் அவர்கள் இருவரையும் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் பெண் காவலர் சகுந்தலா இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவர் கதிர்வேலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை தத்தனேரியில் பெண் காவலர் சகுந்தலாவிற்கு, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி தலைமையில் இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க : ”பல்லடத்தை அதிமுகவின் எஃகுக் கோட்டையாக மாற்றுவேன்” - உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி!