திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உலவாலயத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி பேசுகையில், ”ஜனநாயக ரீதியில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல முயன்ற எங்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் (டிச.28) காவல் துறை வழங்கிய உணவு உள்ளிட்டவற்றை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம்.
விவசாயிகள் பயங்கரவாதிகளா?
தொடர்ந்து, காவல் துறையினர் எங்கள் வீடுகளை கண்காணித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை போல காவல் துறையினர் எங்களை கண்காணித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனை கண்டித்து விரைவில் தமிழ்நாட்டின் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
முதலமைச்சருக்கு கோரிக்கை
மேலும், தன்னை ஒரு விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், விவசாயிகளை அச்சுறுத்தும் செயல்களை கைவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: போராட்டக்களத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட விவசாயிகள்