திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சுப்பிரமணியம், அந்தப் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக 30 லட்சம் ரூபாய் செலவில் மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதி, கலை அரங்கம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மேலும், இப்பள்ளியில் உள்ள 30 வகுப்பறைகளில் கணிணி மயமாக்கப்பட்ட தொடுதிரைகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்துத் தர மற்ற முன்னாள் மாணவர்களுடன் முயற்சி எடுத்து வருகிறார். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், அடிப்படை வசதிகளற்று இருக்கும் அரசு பள்ளிகளை தத்தெடுத்து நடத்தினால் பல ஏழை மாணவர்களின் கல்வி கனவு நிறைவேற்றப்படும் என்பது சுப்பிரமணியன் நமக்கு கற்பித்துள்ள பாடமாக உள்ளது.