அதிமுக கட்சியில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள், கோழிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் கோழிப்பண்ணைகள் அதிகம் நிறைந்த பகுதி பல்லடம். இங்கே புனாவிற்கு அடுத்தபடியாக கோழிகளுக்கு எந்த நோய் வந்தாலும் கண்டறியக் கூடிய வகையில் ஆய்வுக்கூடம் 13 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கூடிய விரைவில் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக கட்சி நூற்றாண்டு காலம் இருக்கும்.
அந்த வகையில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு உழைப்பதை எங்களது பணி, அந்தப் பணிக்கு ஏற்ற ஊதியத்தை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் நீதிபதி கர்ணன் கைது