இலங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தயாரித்த பாஸ்போர்ட்டை வைத்து கனடா செல்ல உள்ளதாக சென்னை க்யூ பிரிவு காவல்துறையினருக்கு சில நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், போலி பாஸ்போர்ட்டுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரேம்குமார், விமான நிலைய அலுவலர்களிடம் சோதனையில் பிடிபட்டார்.
விமான நிலை அலுவலர்களிடம் பிடிபட்ட பிரேம்குமார் க்யூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு ராஜ்மோகன் என்பவர், பிரேம்குமாரிடம் 28 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் மூலம் கனடா அனுப்பி வைக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் ராஜ்மோகன்குமாரை கைது விசாரித்தனர். இதில், இவர் திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்துள்ளார்.
ராஜ்மோகன்குமார் பணி நிமித்தமாக செல்லும்போது விசிட்டிங் விசா மூலம் பிரேம்குமாரை அழைத்துச் சென்று, நிரந்தரமாக கனடாவில் தங்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். இதேபோன்று ஏழுபேரை அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், ராஜ்மோகன் குமாருக்கு துணையாக இருந்த பெண் உதவியாளர் பாரதி என்பவரையும் க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது க்யூ பிரிவு காவல்துறையினர் ராஜ்மோகன் குமார் அலுவலகம், வீடு ஆகியவற்றை சோதனையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் மாற்றம்?