திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரி கோவிந்தசாமி என்பவரது மகன் சங்கிலிதுரை (வயது 51). இவர் திமுக கிளை செயலாளராக கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் மதுவிலக்கு காவல் சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் சண்முகசுந்தரம், சிவபாரத் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், சங்கிலிதுரைக்குச் சொந்தமான தோட்டத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், அரசு அனுமதி இல்லாமல் சங்கிலிதுரை மது விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 140 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் கூறுகையில், "தளவாய்பட்டினத்தில் உள்ள 3,837 மதுபான கடைகளில் இருந்து மதுபானங்களை சூப்பர்வைசர் செந்தில்குமார் அனுமதி இல்லாமல் எடுத்து சங்கிலிதுரையிடம் ஒப்படைத்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது மதுபான கடையின் சூப்பர்வைசர் செந்தில்குமார் தலைமறைவாக உள்ளதால், சங்கிலிதுரையைக் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது!