அங்கன்வாடி குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக தமிழ்நாடு அரசு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் மதிய உணவோடு முட்டை வழங்கிவருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் வருவது வழக்கம்.
நேற்று அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அங்கான்வாடி பள்ளியில் உள்ள சத்துணவு பணியாளர்கள் சமைக்கும் முன் முட்டைகளை கழுவியபோது முட்டைகள் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு , குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வழங்கவிருந்த முட்டைகள் நேற்று நிறுத்தப்பட்டது. திருப்பூர் வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் திருப்பூர் தென்னம்பாளையம், காட்டுவளவு, பூம்புகார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போனதால் கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவிகளிடம் பள்ளி தாளாளர் அத்துமீறல் - போலீசார் விசாரணை!