திருப்பூர்: தமிழகத்துக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இன்னமும் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக நடக்கிறது. கடந்த 19-ஆம் தேதி திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலை கேரள அரசு நடத்தி இருந்தது. இதில் பம்பர் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர 20 பேருக்கு தலா ஒரு கோடி பரிசு என அறிவிக்கப்பட்டு, கேரள அரசின் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இந்த திருவோணம் பம்பர் பரிசான ரூ.25 கோடிதான் கேரள அரசு இதுவரை அறிவித்ததில் பெரிய பரிசுத்தொகை ஆகும். இதனால், சுமார் 80 லட்சம் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது. ஒரு சீட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் கேரள அரசும் பெரிய அளவில் கல்லா கட்டியது.
தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் ஏராளமாக கேரள பம்பர் லாட்டரி வாங்கி குவித்து இருந்தார்கள். இந்த நிலையில், செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை நடைபெற்ற பம்பர் குலுக்கலில் டி.இ.230662 என்ற எண்ணுக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த பரிசுக்குரியவர் யார் என்று தெரியாமல் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு முதல் பரிசு விழுந்ததாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பிறகு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், குப்புசாமி, ராமசாமி மற்றும் நடராஜன் ஆகிய 4 பேர் சேர்ந்து லாட்டரி வாங்கியதாகவும், அவர்களுக்கு அந்த பரிசு விழுந்ததாகவும் தகவல் பரவியது.
அந்த 4 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி அலுவலகத்திற்குச் சென்று பரிசுக்கு உரிமை கோரியதாகவும், தங்களது பெயர், அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கோரியதாகவும் தகவல் பரவியது. அவர்களும் பரிசு உரிமை கோர திருவனந்தபுரம் சென்று இருந்தார்கள்.
கேரள லாட்டரி தலைமை அலுவலகமானது லாட்டரி பரிசு உரிமை கோரியவர்கள் 4 பேராக இருப்பதால், 4 பேரையும் வங்கி கணக்கு, பான் கார்டு மற்றும் அடையாள விபரங்களை கேட்டபோது, அதில் ஓரிருவருக்கு வங்கி கணக்கு எண் இல்லாததால், அனைவரையும் வங்கி கணக்கு தொடங்கிய பின் வரச்சொல்லி அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அந்த பரிசினை அவர்கள் இன்னமும் பெறாமல் இருக்கிறார்களாம். இது மட்டும் இல்லாமல் பாலக்காட்டுக்கு மருத்துவமனைக்குச் சென்று விட்டு திரும்பியபோது லாட்டரி வாங்கியதாக கூறிய அவர்கள், தங்களது அடையாளத்தை மறைக்க காரணம் என்ன என்று கேரள மீடியாக்கள் துருவித் துருவி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், கேரள பம்பர் லாட்டரி சீட்டானது கேரளாவில் கள்ளத்தனமாக லாட்டரி வாங்கி, தமிழ்நாட்டில் விற்கக் கூடிய தொழில் செய்யும் நபர்களுக்கு பரிசு விழுந்து இருப்பதாகவும், அதனால்தான் அவர்கள் அடையாளத்தை மறைப்பதாகவும், பாலக்காட்டு மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலுக்கு ஏற்றாற்போல திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கேரள லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனை காவல் துறை கண்டுகொள்வதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தவிர கேரள லாட்டரி முடிவு எண்களைக் கொண்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், நல்லூர், ராக்கியாபாளையம், கே.வி.ஆர் நகர், சந்தைப்பேட்டை, புது பஸ் ஸ்டாண்ட், எம்.எஸ்.நகர் உள்பட மாநகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடை பார்களில் பாரபட்சமின்றி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கள்ள லாட்டரி விற்பனை தாராளமாக நடக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் கள்ள லாட்டரி தொழில் செய்யும் நபர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்குத்தான் பரிசு விழுந்ததாக பாலக்காட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. லாட்டரி பரிசு பெற்ற நபர்கள் யார் என்பது அவர்கள் தங்கள் அடையாளத்தையும், வங்கிக்கணக்கு உள்ளிட்ட விபரங்களை கேரள லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பித்தால்தான் முழு விவரமும் தெரிய வரும். அதுவரை லாட்டரி பரிசு பெற்றது கள்ள லாட்டரி கும்பலா அல்லது உண்மையிலுமே திருப்பூரில் இருந்து சென்ற சாமானியர்களா என்ற குழப்பம் தீர வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: ரவுடி மீது கொலை முயற்சி! போலீசாரிடம் சிக்கிய 4 பேர் - பின்னணி என்ன?