சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215ஆவது நினைவுநாளை முன்னிட்டு, அவரது பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள மேலப்பாளையம் பகுதியில், தமிழ்நாடு கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ” தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையத்தில், மணி மண்டபம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரிடத்தில் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் உற்பத்தியாகும் பால் முழுமையாக பெறப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் பாலை கொள்முதல் செய்யாமல் அனுப்பியது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கேயம் நாட்டு மாடு இன பாலை கொள்முதல் செய்ய தனி மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்” என்றார்.
இந்நிகழ்வில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தீரன் சின்னமலை நினைவு தினம் - அமைச்சர்கள் மரியாதை!