திருப்பூர்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொதுவாகப் பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டன.
மதுபானங்களுக்கு குவார்ட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலைப்பட்டியல்படி மதுபானங்களை விற்க, டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ஒருவர் காப்பர் என்கிற குவார்ட்டர் பிராந்தி பாட்டிலை வாங்கியுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள விலையான 140 ரூபாய்க்குப் பதிலாக 170 ரூபாய் கேட்டுள்ளனர். அவர் வாங்கிய குவார்ட்டருக்கு அரசு கூடுதல் கட்டணமாக 20 ரூபாய் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. இருப்பினும், டாஸ்மாக் ஊழியர் அவருக்கும் சேர்த்து 10 ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளார். அதாவது 160 ரூபாய்க்குப் பதில் 170 ரூபாய் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த மதுப்பிரியர் ரசீது வழங்க வேண்டும் என கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லையா? சோகத்தில் ரசிகர்கள்..!