இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் திருப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் அமைந்துள்ள பாஜக ஆட்சி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஜனநாயக விரோதமாகச் செயல்படுகிறது.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்திவிட்டு, தற்போது புதுச்சேரி அரசைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆடு, கோழி வாங்குவது போல புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.
வழக்கமாக சொத்துக்கு தான் பினாமியாக இருப்பர். ஆனால், தமிழ்நாடு அரசு, பாஜகவிற்கு பினாமியாக உள்ளது. தேர்தல் வரும் சூழ்நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை பயன்படுத்தி புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது.
கடன் தள்ளுபடியால் கூட்டுறவு அமைப்புகள் நிலை குலைந்து போகும். திருப்பூரில் நூல் விலை காரணமாக பனியன் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவை பூர்த்தியாகாமல் ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதால் நூல் விலை இந்த நிலையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நூலைக் கொள்முதல் செய்து நியாயமான விலையில் கொடுக்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டமாகப் போராடி வருகிறார்கள். இதில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும். ஜெயலலிதா சட்டப்பேரவையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தற்போதுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், படிப்படியாகப் பூரண மதுவிலக்கு போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார்.
ஆனால், தற்போது நடைபெறும் அம்மா ஆட்சி, அம்மா அரசு என்று கூறும் அதிமுகவினர், தற்போது வரை இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தவில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!