திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல்லடம் என்.ஜி.ஆர். சாலையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், அப்பகுதியிலுள்ள கடைகளில் தகுந்த இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகுந்த இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வருகின்றனரா என்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் இல்லாமல் வெளியில் வரக்கூடாது என எச்சரிக்கைகையும் விடுத்தார். பின்னர் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பல்லடம் நகராட்சி ஆணையர் கணேசனிடம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஆணையர் கணேசன், சுகாதாரத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கரோனா உறுதி