திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் திறம்பட செயல்பட்டுவருகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. வென்டிலேட்டர் வசதியைப் பொருத்தவரை அரசு மருத்துவமனையில் ஏழு உள்பட, தனியார் மருத்துவமனைகளில் 79ஐ சேர்த்து மொத்தம் 86 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி, உடுமலை உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும் கரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன, என்றார். அதைத்தொடர்ந்து அவர், திருப்பூர் மாவட்டத்தில் ஆறு பேர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்தப் பரிசோதனைகளில் லண்டனிலிருந்து திரும்பிய ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 1360 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !