கோவை வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு செம்மரக் கட்டைகள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கோவை அவிநாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் செம்மரக் கட்டைகள் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியிலிருந்த இரண்டு பேரிடம் விசாரித்தபோது திருப்பூரில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கிவைத்து பல்வேறு இடங்களுக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூரில் உள்ள அந்த குடோனில் சோதனை செய்தபோது அங்கு ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்ததற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக முபாரக், கார்த்திக், உத்மன் ஃபாரூக், சையது அப்துல் காசீம், அப்துல் ரகுமான், தமீம் அன்சாரி ஆகியோர் கைது செய்த நிலையில் மேலும் இருவரை தேடிவருகின்றனர்.