திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள குங்குமம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். பிருந்தாவும் சந்தோஷும் நான்கு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.2) மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது பிருந்தா தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது அலறும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த பிருந்தா சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். பிருந்தா உயிரிழந்துள்ள நிலையில், காதல் தோல்வியால் பிருந்தா தீக்குளித்து இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பிருந்தா இறப்பதற்கு முன்பு பேசும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "எனது காதலன் சந்தோஷ் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை யார் என்றே தெரியவில்லை என்று கூறியது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நான் தீக்குளித்தேன்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, பிருந்தாவின் உயிரிழப்புக்கு காரணமான சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் பல்லடம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலம் ஏடிஎம் வாடிக்கையாளருக்கு அடித்த லக் பாருங்களே...!