கோவை மாவட்டம் சோமையனுார் வனத்தில் பிடிக்கப்பட்டு டாப் சிலீப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி அந்த பகுதியிலிருந்து வெளியேறி கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முகாமிட்டது.
பின்பு கும்கி கலீம் யானையுடன் சேர்ந்து விளையாடிய சின்னத்தம்பி யானை அங்கிருந்து வெளியேறியது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக மடத்துக்குளம் அருகில் உள்ள கண்ணாடிப்புதூர் கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்தது. சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முயற்சித்தும் பலனிக்கவில்லை. யானையானது அந்தப் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் உள்ள கரும்புகளைத் தின்றும், அருகில் உள்ள பயிர்களை உணவாக உட்கொண்டு அந்தப் பகுதியிலேயே சுற்றத்திரிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (பிப்.9) கண்ணாடிப்புதுார் கரும்புத் தோட்டப் பகுதிக்கு வந்த கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் ஆகியவை உதவியுடன் சின்னத்தம்பியை விரட்ட முயன்றபோது, அது கும்கிகளை மிரட்டியது. இதனால், கும்கி யானைகள் பயந்து பாகன்களை நோக்கி ஓடியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகன்கள் யானைகளைக் கட்டப்படுத்தி அமைதிப்படுத்தினர்.
இதனையடுத்து, சின்னத்தம்பி யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர், அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் கும்கி யானைகளை வைத்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னத்தம்பி யானை கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டு பிறகு, ஜனவரி 31 ஆம் தேதி பொள்ளாச்சி வழியாக உடுமலைப்பேட்டை வந்தது குறிப்பிடத்தக்கது.